Friday 16 February 2018

சாப்பிட்டு படுத்தா , உறுத்தாத மனசோட , நிம்மதியா தூங்கணும் பாஸ்...!


சின்ன வயசுல , எங்க ஊருக்குப் பக்கத்து ஊர்ல இருக்கிற லைப்ரரிக்கு நடந்தே போவேன். நாலு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.
இடையில ஒரு பெரிய கண்மாய். கருவேலங்காடு. சுட்டு எரிக்கிற வெயில்ல , கருவேல நிழல்ல கொஞ்ச நேரம் இருந்திட்டு , மேலே நடப்பேன். அப்படி ஒரு நாள் போகும்போது, ஒரு மரத்துக்கு கீழே , ஒரு நாலு ரூபாய் கிடந்துச்சு. ரெண்டு இரண்டு ரூபாய் நோட்டு. அக்கம் பக்கத்துல யாருமே இல்லை. அப்படியே எடுத்திட்டு , பாக்கெட்டுல வைச்சுக்கிட்டேன். ரொம்ப தூரம் போனதுக்கு அப்புறம், ஒரு அண்ணா சைக்கிள்ல வந்துக்கிட்டு இருந்தாரு. எதையோ தேடிக்கிட்டு வந்தமாதிரி இருந்துச்சு. என் கிட்டேயும் கேட்டாரு. தம்பி, கீழே எதையாவது பார்த்தியான்னு..? ரொம்ப அப்பாவியா முகத்தை வைச்சுக்கிட்டு - இல்லையேன்னு சொல்லிட்டேன்... அப்போவந்து , நாலு ரூபாய் எல்லாம் கொஞ்சம் பெரிய அமௌன்ட் தான்... அனேகமா அவரோட, ஒரு நாள் கூலியா கூட இருந்து இருக்கலாம்...ஆனா, அதையெல்லாம் யோசிக்க முடியலை அப்போ...  எனக்கும் சின்ன வயசு தானே. 11 வயசு இருக்கும்னு நினைக்கிறேன்... அவர் வேறு எதையோ கூட தேடி வந்து இருக்கலாம்னு , நானா மனசை சமாதானப் படுத்திக்கிட்டேன்.. ...

ஆனா, எவ்வளவு அல்ப்பத்தனமான புத்தின்னு , அதை நினைச்சு - மனசுக்குள்ளேயே புழுங்கி தவிச்சு , தூக்கம் வராம புரண்டு தவிச்ச நாட்கள் எத்தனை எத்தனையோ... ச்சே, அன்னைக்கு அவர் கிட்ட கொடுத்து இருந்து இருந்தா... நல்லா இருந்து இருக்குமே... இப்போ நிம்மதியா இருந்து இருக்குமேன்னு , நொந்து போயிருக்கிறேன் பலமுறை...

அதன் பிறகு , எவ்வளவோ நான் எனக்குள் பெருமைப் படும் காரியங்கள் பண்ணி இருந்த போதிலும் - மனசு அறிஞ்சு நான் செஞ்ச தப்பு - இன்னைக்கும் முள்ளு மாதிரி குத்திக்கிட்டுத் தான் இருக்கு. அதன் பிறகு, என் சக்திக்கு உட்பட்டு நான் பல நல்ல காரியங்கள் செய்த போதிலும், ... அன்னைக்கு நான் நிர்தாட்சண்யமாக மறுத்த - அந்த நாலு ரூபாய்க்கு ஈடாகாது என்று என் மனதுக்கு நன்றாகத் தெரியும்...

அதுக்குப் பிறகு ஒரு நாள் ரோட்டில நடந்து போனப்போ - ஒரு அம்பது ரூபாய் தாள் ஒன்னு உருண்டு வந்துக்கிட்டு இருந்துச்சு... சோதனையா, என் கையில காசு இல்லாத நேரம் அது.. சொந்தமா வீடு கட்டி, அங்கே இங்கேன்னு கடன் வாங்கி இருந்த நேரம்... முழி பிதுங்கிக் கிட்டு இருந்த வேளை. அட, ஆண்டவன் இந்த அம்பது ரூபாய் நமக்கு கொடுத்து இருக்கார் பாரு, மாசத்துல மீதி இருக்கிற இந்த அஞ்சாறு நாளை ஓட்டிடலாம்னு, ஒரு நிமிஷம் யோசிச்சேன்....  ஒரு நிமிஷம் மனசு தடுக்குன்னு ஆச்சு... ஆகா... ஆண்டவன் இரண்டாவது பரீட்சை வைச்சு இருக்காருப்பா....ன்னு தோணிச்சு...

முன்னாலே பார்த்தேன்.. பல வருஷங்களுக்கு முன்னாலே நடந்த சம்பவம்  மாதிரியே , ஒரு ஆளு - ... சைக்கிள்ளே போய்க்கிட்டு இருந்தாரு...நாப்பது வயசு இருக்கும் அவருக்கு. அண்ணாச்சின்னு கை தட்டி கூப்பிட்டேன்.... காது கேட்கலை... அந்த அம்பது ரூபாயை எடுத்துக்கிட்டு அப்படியே ஓடிப்போய் அவர் முன்னாலே நின்னேன்.. என் கண்ணுக்கு அந்த கருவேலங்காட்டுல பார்த்த அண்ணன் மாதிரித் தான் தெரிஞ்சது "அண்ணே. இந்த ரூபாய் உங்க இதா பாருங்க"ன்னு கேட்டேன்.. அவர் ஹேண்டில் பார் பிடிச்சு இருந்த கையில இன்னொரு அம்பது ரூபாய் இருந்துச்சு.. ரெண்டு அம்பது ரூபாய் வைச்சுக்கிட்டு சைக்கிள் ஓட்டிக்கிட்டு போய் இருப்பார் போல.. ஒன்னு காத்துல பறந்து போனதை அவர் கவனிக்கலை... "தம்பி, ரொம்ப நல்லா இருப்பே நீ "ன்னு , அவர் என் கையைப் பிடிச்சுக்கிட்டு கும்பிட்டாரு... அவர் குழந்தைக்கு மருந்து வாங்கப் போய்க்கிட்டு இருந்தாராம்.. அவர் முகத்துல தெரிஞ்ச அந்த நிம்மதி , இன்னைக்கும் மறக்க முடியாது....

அவரை விட எனக்கு கிடைச்ச நிம்மதி, வார்த்தைகளில் சொல்ல முடியாது... அந்த வேளையில், சாப்பிட கையில காசு இல்லாம இருந்தப்போ கூட , அவர் கிட்ட திருப்பிக் கொடுத்த அந்த நேரம் - பல வருஷங்களுக்கு முன்னே நான் ஒளிச்சு வைச்ச அந்த நாலு ரூபாயை திருப்பிக் கொடுத்த அந்த உணர்வை எனக்குக் கொடுத்தது... இறைவன் என்னை கண்டிப்பா மன்னிச்சு இருப்பார்னு  அந்த நிமிஷம் நினைச்சேன். ... உடனே அதுக்குப் பலன் கிடைச்சது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

... அடுத்த பத்து நிமிஷத்துல, எனக்குஒரு போன் கால் .... , " டே, மாப்ளே --- நீ காசு கேட்டு இருந்தே இல்லை... வீட்ல தானே இருக்கிறே... நான் அங்கே வர்றேன்" னு என் பிரெண்ட் அம்பது ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தான்... இந்தாடா, அப்பா இப்போ தான் ஊர்ல இருந்து வந்தாரு. ... சொன்ன மாதிரி இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ளே திருப்பி கொடுத்திடு"ன்னு... சொன்னான்.

இறைவா... அம்பது ரூபாய் திருப்பிக் கொடுத்ததுக்கு - வட்டி இல்லாத கடனா, அம்பது ஆயிரமா...? தேங்க் யூ... தேங்க் யூ ன்னு நினைச்சுக்கிட்டேன். தெரிஞ்சவங்க எல்லார் கிட்டேயும் கேட்டு - முழுக்க வழிகள் அடை பட்டு இருந்த நேரம்... அம்பது ஆயிரம் இன்னைக்கு வேணும்னா ஒரு சின்ன அமௌன்ட் மாதிரி தோணலாம்... பத்து வருஷம் முன்னாலே , எனக்கு ரொம்ப பெரிய அமௌன்ட்...

இதை எல்லாம் எதுக்குச் சொல்ல வர்றேன்னா... அந்த நாலு ரூபாய் சம்பவம் இத்தனை வருடம் ஆன பிறகும், என் மனசுக்குள்ளே ஒரு வடு ஏற்படுத்த வேண்டும் என்று , இறை நினைத்து இருக்கலாம் என நினைக்கிறேன்.. அன்னைக்கு அந்த சின்ன வயசுல, அந்த நாலு ரூபாய் திருப்பிக் கொடுத்து இருந்தால் கூட - சில தினங்களில் நான் மறந்து போய் இருக்கக் கூடிய ஒரு சாதாரண சம்பவமாக மாறி இருந்து இருக்கும். (அப்படின்னு நானா, இன்னைக்கும் மனசை தேத்திக்கிட்டு இருக்கேன்... ஆனா, மனசு இன்னும் ஒப்பலை..)

இப்போவும் வாழ்க்கையில் சின்ன சின்ன சறுக்கல் ஏற்படும்போது - மனசு அறிந்து , யாருக்கும் தீங்கு இழைக்கவே கூடாது என்கிற மன உறுதியை எனக்கு அந்த சம்பவம் வழங்கியது...

மனிதனுக்கு எது முக்கியம்..? நல்லதொரு மனிதன் என்கிற வேஷம் போட்டு வாழ்வது தானா... இல்லை... கோவில் , குளம் என்று - நெத்தியில் குங்குமம் , விபூதி வைச்சுக்கிட்டு , கோவில் காரியங்கள் என்றால் - லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுத்து விட்டு , கண் முன்னாலேயே சிலர் கஷ்டங்களை துடைக்கும் நிலைமை இருந்தும் பாரா முகமாக , நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கி இருந்தால் மட்டும் போதுமா..? நிச்சயமாக இல்லை....

தன் உடமை என்று இல்லையானால் - அதை ஒதுக்கி வைக்கக் கூடிய ஒரு நேர்மை வேண்டும்.. அடுத்தவன் பார்க்கவில்லையே என்று எண்ணிக்கொண்டு - தப்பு , தண்டா செய்யாத , சபலம் இல்லாத புத்தி வேண்டும்... சுயநலம் மட்டுமே எண்ணிக்கொண்டு , அடுத்தவர் காலை வாரி விடாத , நன்னடத்தை வேண்டும்... அடுத்தவர் வயிற்றில் அடித்து, அடுத்தவர் தலையில் ஏறி - நாம் மேலே செல்லாத , நேர்வழியில் செல்லக்கூடிய நெஞ்சுரம் வேண்டும்... தப்பே ஒருவர் செய்தாலும் , பலர் முன்னிலையில் அவமானப் படுத்தாமல், நாசுக்காக அதை அவர் உணரும் முறையில் வெளிப் படுத்த வேண்டும்...

வாழ்க்கையில் நாம் நினைத்த இடைத்திற்க்கு வருவதற்கு - ஆயிரம் குறுக்கு வழிகள் இருக்கலாம்... தொடர்ந்து நாம் அந்த இடத்தில் நிலைக்கவேண்டும் எனில், கடின உழைப்பும், நேர்மையும் , ஆண்டவன் ஆசியும்  இருந்தால் மட்டும்தான் முடியும். ...

இதையெல்லாம் கடை பிடித்தல் அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல... படிக்கும் உங்களை விடுங்கள், எழுதும் எனக்கும் சேர்த்துதான்...   ஆனால் , முயன்றவரை முயற்சி செய்வோமே...!

இப்போதெல்லாம் என்னிடம் ஜோதிட ஆலோசனை கேட்டு வருபவர்களிடம் - நான் ஒரு விஷயம் சொல்லத் தொடங்கி இருக்கிறேன்... இந்த பூஜை, இந்த கோவில், இந்த பரிகாரம் என்று நீங்கள் செய்யத் தொடங்கும் முன்பு - இதுவரை யாராவது ஒருவர் , மிகவும் மனம் கோணும்படி நீங்கள் நடந்து இருக்கிறீர்களா? நாம் தான் கெட்டிக்காரர்கள் என்று , ஏதாவது அப்பாவியை ஏமாற்றி இருக்கிறீர்களா..? ஆசை காட்டி , மோசம் செய்து ஏதாவது பெண்ணின் / ஆணின் கண்ணீருக்கு நீங்கள் காரணமாகி இருக்கிறீர்களா? முதலில் அந்த தவறை சரி செய்ய முயலுங்கள். அவர் மனம் குளிரச் செய்யுங்கள்.. அவரிடம் இருந்து வாயார வாழ்த்து வாங்குங்கள்....

மனிதனாகப் பிறந்தால் தவறு செய்தல் சகஜம். ஆனால், அதன் பலா பலன்களை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும்.  செய்த தவறை, உணர்ந்து திருந்தி வாழ்க்கையில் திரும்பவும் அந்த தப்பை செய்யாமல் இருப்பது - நீங்கள் ஆயிரம் கோவிலுக்குச் சென்ற பலனைத் தரும்.

யாருக்குத் தெரியப் போகிறது எந்த மெத்தனம் எப்போதும் வேண்டாம்.   ஆண்டவனின் நீதி மன்றத்தில் - சாட்சிகள் பார்த்து, அலசி ஆராய்ந்து தீர்ப்பு கிடைப்பது இல்லை. முழு முதல் சாட்சியாக அவன் இருக்கிறான்.

அவன் வழங்கும் தீர்ப்பும் உங்கள் மூலம் தான். தவறுக்கு உரிய தண்டனை, உங்கள் மனது அறியவே , உங்கள் கண் முன்னேயே நடக்கும். உங்கள் மனதை விட சிறந்த நீதிபதி , உலகத்தில் இல்லை.....

செய்த தவறுகளை உணர்ந்து, திருந்தி - அதன் பிறகு ஆண்டவனைச் சரணடையுங்கள்.... நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில், உடனே தூக்கி வைக்கப் படுவீர்கள்.... இது சர்வ நிச்சயம்... சத்தியம்....

போகிற போக்கில் - இன்னும் ஒரே ஒரு சம்பவம். உலகம் ஏன் இன்னும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது, என்கிற உண்மை புரியும்... 

இது , சமீபத்தில் நடந்த உண்மை சம்பவம். ஒருவர் லாட்டரி கடையில் சீட்டு வாங்குறாரு. கையில காசு இல்லை, நாளைக்குத் தாரேன்னு சொல்றாரு. சரின்னு கடைக்காரர் அந்த சீட்டுக்களை தனியே எடுத்து வைக்கிறாரு... கடவுளின் திருவிளையாடலைப் பாருங்கள். அந்த எடுத்து வைக்கப்பட்ட சீட்டுக்களில் ஒரு சீட்டுக்கு கோடி ரூபாய் பரிசு. .....
(நான் கடைக்காரரா இருந்தா என்ன பண்ணி இருப்பேன்..? அம்பது ரூபாய் சமாச்சாரமா என்ன? கூப்பிட்டு திருப்பிக் கொடுக்க..? கோடி யாச்சே... ஆளு அப்பீட்டு... இல்லை நீதான் காசு கொடுக்கலைலே, கம்ம்னு போயிடுன்னு கூச்சல் போட்டு இருப்பேன்.. இல்லையா, ஆளை விட்டு மிரட்டு.. இப்போ தான் கோடீஸ்வரனாகப் போறோமே..! ஹா... ! நான் அடிச்ச மணி அவனுக்கு கேட்டுருச்சு.. அடிச்சான் பேரு.. ஆர்டரு ... ஹே.. வேணு... வேணு சாஸ்திரி ..னு வடிவேல் மாதிரி அலம்பல் பண்ணி இருக்க மாட்டேன்.! ஹா ! ... )

ஆனா, இங்கே ..? அந்த கூறு கேட்ட மனுஷன் அந்த சீட்டுக் கேட்ட ஆளைத் தேடிப் போய் - இந்தா ஐயா , நீ வாங்குன சீட்டு , முதல் பரிசு விழுந்து இருக்கு , எனக்கு கொடுக்க வேண்டிய ரூபாயை மட்டும் எனக்குக் கொடுன்னு சொல்றாரு.....
(எப்பேர்பட்ட மனுஷனா இருக்கணும்? யோசிச்சுப் பாருங்க...!
நீங்க எல்லாம் பக்கத்துல , எங்க கூடத் தான் இருக்கிறீங்களாயா.. எங்க கண்ணுல மட்டும் ஏன் அடுத்தவன் குடி கெடுக்கிற ஆளுகளா இருக்கிறாங்களோத் தெரியலையே... . )

இத்தனைக்கும், ரெண்டு பேருமே கஷ்டப்படுற குடும்பம்...

இவரைப் பார்த்திட்டு அந்த மனுஷன்... ஐய்யயோ... அது மகா தப்புங்க.. நான் காசு கொடுத்து இருந்தாலாவது பரவா இல்லை.... இது சரி இல்லங்க.. இது உங்க உடமை, எனக்கு வேண்டாம்னு அவர் கெஞ்ச ..... ( யோசிச்சுப் பாருங்க பாஸூ... கோடி ரூபாய் சமாச்சாரம்...) , இவர் கேட்கவே இல்லை... கஷ்டப்படுற உன் குடும்பத்தை பாருய்யா, கல்யாண வயசு தாண்டி ரெண்டு பொம்பளை  புள்ளைங்களை வைச்சுக்கிட்டு" ன்னு - அவர் கிட்டேயே வலுக்கட்டாயமா கொடுத்திட்டு வந்து இருக்காரு...!

அதன் பிறகு என்ன நடந்ததுன்னு கீழே உள்ள கட்டுரையை படிச்சுப் பாருங்க....

புராணமா காலமா இருந்தா, 'சொய்ய்ங்.'. னு சொர்க்கத்துல இருந்து விமானம் வந்து ரெண்டு பேரையும்  குடும்பத்தோட - கடவுள் கூப்பிட்டுப் போயிருந்து இருப்பாரு.... "நிம் நேர்மையைக் கண்டு மெச்சினோம்... எமது திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று..."

ஏன் , இப்போ வரலை? ...

இது கலிகாலமாம்ல ! ...  இந்த பணத்தை வைச்சு அவங்க நிறைய பேருக்கு நல்லது பண்ணனுமாம்..... நம்மளை மாதிரி ஆளுங்க எல்லாம், அவங்களைப் பார்த்திட்டு திருந்தனுமாம்....  இப்படியே நிறைய சொல்லிக்கிட்டே போறாரு.. கடவுள்.....

இப்படிப் பட்ட ஆளுங்களை  சத்தம் போடாம , இருட்டடிப்பு செய்யாம - கௌரவித்த பொது மக்கள், மீடியா, அரசாங்கம், பொதுவா நம்ம ஊர் மக்களுக்கு வெளிச்சம் காட்டிய - ஆனந்த விகடன், யார் யாருக்கோ பாராட்டு வைத்து கவுரவிக்கும் தொண்டர் அடிப்பொடிகள் மத்தியில் பெரிய்ய்ய மனது வைத்து கெளரவம் செய்த - இயக்குனர் பார்த்திபனின் மனித நேயம் அமைப்பு என்று எல்லோருக்கும், ஒரு ராயல் சல்யூட்.

சுனாமி எல்லாம் வராம , திரும்பி ஓடுறது - இந்த மாதிரி ஒரு நேர்மைக்கு தலை வணங்கித் தான் என்று எண்ணத் தோன்றுகிறது....

நாமளும் திருந்த முயற்சி செய்வோம் நண்பர்களே...  ஜெயிச்சு உச்சாணிக் கொம்புல ஏறி நிற்கிறது மட்டுமா வாழ்க்கை..? சாப்பிட்டு படுத்தா , உறுத்தாத மனசோட , நிம்மதியா தூங்கணும் பாஸ்...!

( பின் குறிப்பு : இந்த பேப்பர் கட்டிங்கை எனக்கு அனுப்பி , நம் வாசகர்களிடம் தெரியப் படுத்த விழைந்த - அன்பு நண்பர் கோடியில் ஒருவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி... கட்டுரையை  படித்ததோடு நில்லாமல், சிரமம் பார்க்காது தத்தம் வலைப்பூவிலும் , நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலமும்  தெரியப்படுத்த விருக்கிற  - மனிதம் வளர்க்கப் பாடுபடும் - என் அன்பு சகாக்கள் அனைவருக்கும் , நன்றி .. நன்றி....)

கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து - மவுசில் ரைட் க்ளிக் செய்து , வியூ இமேஜ் செய்யுங்கள். ஒரு லென்ஸ் மாதிரி வரும்.  படத்தின் மேல் மீண்டும் 'கிளிக்'க - பெரிதாக தெரியும்... படித்துப் பாருங்கள்...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1PpLFvTj1LhlTTHGrQTR2KmN6lDVh4KDKRUuvb1vRsHR2d4vH6473axDE7aN2T_1YjyGHe7mjOO-gcNgU9xw00A8Xsux00Gt6OyTZ47Zat1u31IP6ewijH_baKyGAO6FLJKfot-0_ySAq/s640/MR+Suresh_Humanitarian.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8E9_kszxv4AFxCdEpwlkb8XCtBFS8Sr0jRmLrronKHcO1_eYM6jkxBocixeKZ3rc1lftwJKAtefFwIT0i3wd_5kEkFk6D_H6HoZWKK9_sxtCF3pKhgj3YDBFnfAVFZ9v6WLEvMTi_X7hj/s640/Suresh_Manidha+Neyam.JPG

படித்த பிறகு, என் மனதில் ஏற்பட்டதைப் போல - உங்களிலும் ஒரு அதிர்வு ஏற்பட்டு, பல நிமிடங்கள் நிசப்தமாகி , பல ப்ளாஷ் பேக்குகள் மனதில் ஓடி, மனது இன்னும் கொஞ்சம் பண்படும், பக்குவப்படும் என்று நம்புகிறேன் 
 -----------  ஆமாவா..?

 மீண்டும் சந்திப்போம்..!


14/04/2012   16:14

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

கதறல்கள் - 1

Days are passing by listening your epmty promises. Do you believe in Annamalaiyar? Waiting for my hard earned money at the age of 70. -- ...